×

நீதித்துறை பதவி வகிக்க மனரீதியாக தகுதியற்றவர் முஷாரப் உடலை தூக்கில் தொங்க விட உத்தரவிட்ட நீதிபதி பதவிக்கு ஆபத்து

* உச்ச நீதிமன்றத்தில் முறையிட இம்ரான் முடிவு

இஸ்லாமாபாத் : ‘பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடலை இழுத்து வந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்,’ என்று தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம் நேற்று முன்தினம் வெளியானது. அதில், ‘துபாயில் பதுங்கி இருக்கும் முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் எப்படியாவது பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும். அப்படி செய்யும் முன்பாக, அங்கேயே அவர் இறந்து விட்டால், அவருடைய உடலை இழுத்து வந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனநாயக சதுக்கத்தில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

இந்த அதிரடியான தீர்ப்பு, பாகிஸ்தான் அரசை அதிர்ச்சியில் அலற வைத்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்துக்குப் பின்  பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரோக் நசீம் அளித்த பேட்டியில், ‘‘முஷாரப் உடலை பொது இடத்தில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ள நீதிபதி வக்கார் அகமது சேத், நீதிபதியாக பணியாற்ற தகுதியற்றவர். மனநிலை பாதித்துள்ள அவர், இப்பதவியில் நீடிக்க தகுதியற்றவர். முஷாரப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை, பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது. நீதிபதி சேத்தை பதவி நீக்கும் செய்யும்படி, உச்ச நீதிமன்ற நீதி குழுவிடம் அரசு முறையிட முடிவு செய்துள்ளது. இதுபோன்ற நபர்கள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடாது,’’ என்றார்.

ராணுவத்துக்கு கண்டிப்பு

முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. இதை கண்டித்து பாகிஸ்தான் பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராணுவத்தின் கருத்து சட்டம், அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்பும் கூட. தீர்ப்பில் குறைகள் இருந்தால் அதை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது. ராணுவத்தின் செயல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புக்களும் அதற்கு அடிபணிந்தவை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Musharraf ,office ,judge , Mentally incompetent, hold a judicial post Musharraf's body
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...